Saturday, 21 August 2010

ஊருக்குள்ள போகமுன்னம் உள்ளுக்குள்ள வந்தவளே

எல்லைப் பதவியாக் காட்டில் - எம்
எல்லாளப் படைகளின் எல்லைக்கோட்டில்,
உள்ளே ஊடுருவி ஒருமாசம் - பகை
கொல்லும் பணிபல செய்துவந்தார்.
காலை மாலையென் றின்றி - கடும்
மழையும் முதலையும் தாண்டிவந்து,
சின்னப் பொடியளுஞ் சேர்ந்து - பெண்
என்னை மறித்து வெருட்டிக் கேட்டார்.

மழைவிட்ட மாலை மயக்கத்திலே - இந்தக்
காளைகள் கூட்டத்தில் மாட்டினனோ!
மந்த ஒளியிலும் மயான அமைதியிலும் - இங்கு
எந்தப் பக்கமும் எதிரி வந்தடிப்பான்;
இந்தக் காட்டினில் வந்ததுமேன்?' - என்றே
மல்லுக்கு வந்தார் மாமனிதர்.
காலையில் காட்டுக்குள் மேயவந்த - என்
குலத்துக் கோமகளைக் கூட்டவந்தேன்.

காலை கறந்த நற் பால் குடித்து - பின்
கன்றும் குடிக்கவென் றவிழ்த்துவிட்டு,
காட்டுக்குப் போன என் மாடுகளை - நான்
இருட்டமுன் வந்து அழைப்பதுண்டு.
கன்றுகள் தாயைக் காணுதலை - வேண்டிக்
குன்றுக்கும் குழிக்கும் குதித்திருக்கும்;
கள்ளுக்குப் போன கிழவனுந் - தான்
கோள் சொல்லியே என்னையும் கொன்றுவிடும்.

மல்லுக்கு நிற்கும் வீரர்களே - என்
சொல்லினை மிகுந்து மதிப்பீரோ?
'நாமும் உன்குலக் காளைகள் தான் - வழி
போகும் திசை பற்றித் தெளிவுறவே
தேங்கிக் கிடக்கையில் நீயும் வந்தாய், - எம்
தேசப் புயல்களின் பாசறையின் - இடம்
ஏகும் திசையையும் காட்டியெங்கள் - கொடுந்
தாகம் தணிக்கவும் நீர் இறைக்க'; என

காட்டு மழையினில் நான் நனைந்து - நார்க்
கொடியாய் இளகிப் போய் நடந்து வந்தன்.
காட்டில் எத்தனை குளங்களுண்டு, - போக
கொடிகளில் நீர்க்கொடி நிறைய உண்டு?
மாடு நடந்த வாய்க் கால்களுண்டு - இவை
காடு செய்பவர்க் கறியாதவையோ?
ஒதியமலை மட்டும் போயிருந்தன் - அங்கை
எதிரி இருக்கேல்லை விரைந்து போங்கள்!

'எதிரிக் கழுத்துகள் நானறுத்து - வெறி
ஏந்திக் குடித்தனான் குருதிக் குளம்.
ஆயிரம் ஆயிரம் படைவரினும் - நாம்
தாயிடம் கொண்ட நீர் வற்றவில்லை.
முதலைக் குளங்களில் நாட்கணக்கா - பால்
மருதமரத் தின்வேர்க் குடையின் கீழே,
பரிதி வானத்தில் பார்த்திடாமல் - தனி
இரவுப் புழுக்களாய் இருந்ததுண்டு,'

'மரத்தின் இலைகளில் படுத்ததுண்டு - குளிர்
மரமாய் விறைப்புடன் இருந்ததுண்டு;
சுண்ணக் கட்டியைச் செருகிவைத்து - சுடும்
குழலை நெஞ்சோடு சாத்தி நிற்போம்;
ஓடும் ஓணாண் அறுத்துண்ட துண்டு - என்றும்
நாட்டை நம்பியே நாமிருந்தோம்.
கோட்டை சிதைத்து நாம் வருகையிலே - எமைக்
கோதை நீ வந்து சிதைத்துவிட்டாய்.'

மலையில் மிருகங்கள் மிகுந்திருக்கும் - கொடும்
மாலையில் வந்திங்கு பசியடங்கும்,
களிறும் பிடியும் காட்டிடையே - இனிக்
களிக்கவெனத் தாம் புறப்படுமுன்,
குளித்துக் காயவைத் துறங்கி - கூழ்
குடித்துக் கிடந்திட்டுப் போகலாமே?
இருக்குங் கிழவனும் செருமிடுந்தான் - ஆனா
உருக்கம் இருக்கு உங்களில;

'நாற்பது மாட்டுத் தொழுவத்தில - இங்கை
நாங்களும் கிடந்து நிம்மதியாய்,
போர்க்கதை விடுத்துப் பொடியளெல்லாம் - புதுப்
பெண்கதை என்னண்ணை? என்றரிக்க;
சிடுத்துச் செருகிய கன்னவிழி - தனைத்
திறந்தே சிரித்திட்ட பெடியளுடன்,
கழற்றிப் பூட்டிய குழல்களுடன் - சன்னங்களும்
சுழன்று கிடந்தன சிரித்தபடி'

'அண்ணை இண்டைக்கு குடங்குடமாய் - பால்
மொண்டு விழுங்கிறார் பாருங்கோடா,
மொய்த்துப் போனதன் மூளைக்குள்ள - அவா
மொய்த்துக் கிடக்கிறா போலிருக்கு!
கடிச்ச நுளம்பையும் அடிச்சிடாமல் - தான்
பிடிச்சு விடுதலை செய்யிறார் பார்!
பிடிச்ச பெண்ணை விட்டிடாமல் - மணம்
முடிச்சுப் போடோணும் என்கிறார் காண்!'

Wednesday, 4 August 2010

ஈனர்கள் நாம்!

பூப்படைந்த குமரிகளை
குருத்துவேலிக்
கூட்டிலிட்டு
குழைத்து மஞ்சளிட்டு
கூ.. வென்று கிழவியெல்லாம்
கூடிக் கும்மிகட்டி
காத்துக் கிடந்து
காவலிட்டுக் குலவைகத்திக்
குடங்குடமாய்த்
திரவியங்கள்
கொட்டிக்
குளிக்க வார்த்து
சீவி அலங்கரித்து
செதில் செதிலாப்
பதக்கமிட்டு
போற்றிப் பெருமையெல்லாம்
பிதற்றிப் பெருமெடுப்பில்
சாற்றிக் கொண்டாடும்
சடங்குகள் தாம்
கொஞ்சமென்றோ.

அக்காளுடன்
ஆரும் ஒருவன் எங்கோ
தெருவிலொரு பொதுவிடத்தில்
ஏதும் கதைச்சிட்டால்
எரிந்து விழும்
ஆடவர் நாம்.
மீறி ஒரு பெடியன்
மங்கை மனம் மாற்றிவிட்டால்
மண்டைச் சுவர் மோதி
மரித்திடத் தான் மாட்டோமோ?

ஊரோடு சேர்த்து
ஊழிசெய்த
உலகமகா சாத்வீகமும்
பெளத்தச் சீனர்களும்
மறையோதும் இஸ்லாமியரும்
சமாதானமோதிய
சாத்தான் மேற்குலகும்,
கெஞ்சக் கெஞ்ச
கேட்காது
நஞ்சுக் குண்டு
நாலு போட்டு
நாசமாக்கிய வஞ்சக
பாரதரும்!

எல்லாம்
முடிந்தும்,
ஏதெல்லாம் நடக்காதோ
அஃதெல்லாம்
நடந்தேற;
நாய்களெல்லாங் கூடி
புலிப்பிணத்தைக்
குதறித் தின்றும்;
அடங்காக் குரோதமும்
அச்சமில்லா இறுமாப்பும்
கொச்சைச் சிங்களநாய்
குதறித்தின்னக்
குழுக் குழுவாய்
சின்னக்
குழந்தைப் பெண்கள்!

எங்கள்
குலைகளெல்லாம்
கொப்போடு
பாறிவிழ;
நஞ்சும்
வஞ்சகமும்
நெஞ்சுவெடி
கொண்டதும் போ;
`எஞ்சும்
சிலநூறும்
மிஞ்சுமோ`
அஞ்சுகிறோம்!

சட்டங்களும்
சேர்ந்து
கட்டிவைத்த
கோட்டைக்குள்ளே
`வாடி`யென்று
அழைக்கிறான்
கேட்டெதிர்க்க
ஆருமில்லை.
ஒற்றை வீட்டிலொரு
இருண்ட குழியில்
பத்துப் பருவப் பெண்கள்
பத்தும்
சிறுதுணியுமற்று!

25.06.2010

வானமாய் வாழ்த்தும்

'மூன்று பக்கம் பகைவர்
சாகசங்கள் நடக்கும்
களம் எம்கைக்கு மாறும் '
மூச்சிரைக்கும் உனது
கரகரத்த குரலில்
கேட்டிருந்த கடைசி
கட்டளையை கேட்டேன்
கனவுகளில் அழுதேன்

அப்பனே ராசா
ஆருமற்றோ போனேன்
பெற்றவனே எங்கே
பிள்ளைகள் நாமிங்கே
துள்ளி நின்ற வீரம்
துரோகம் தின்ற தேசம்
தாகந்தீரா கடலில்
தவித்த தனிப்பிணமாய்
தனயன் இங்கே கிடக்க
தந்தை எங்கே தலைவா?

பக்கத்தில பிரண்டு
செத்துக்கிடக்கும் பிணமும்
எட்டத்தில மிரண்டு
ஓடிக்கொள்ளும் உயிரும்
கேட்டு நின்ற உரிமை
நட்டநடுத் தெருவில்
நாதியற்றுக் கிடக்கிறோம்
அநாதைகளின் தாயே ;

தப்பிக்கொண்ட சன்னங்களில்
தாண்டியோடும் தலைகள்
கடைசித் தோணியில்
கைநீட்டிக் கைப்பிடித்து
காலூன்றிக் கதறி
பட்டகுண்டு பறிக்க
கொடுத்த உயிர் தவிக்க
விழுந்துகிடக்கும் உடலின்
பிறப்புரிமை நினைத்து
பிதற்றிக் கொள்ளும் பிசாசுகளாய்
பாரும் ஐயா தலைவா
ஆருமற்றுப் போனோம்;

ஊனமுற்ற இனத்தின்
அறுந்து போன கயிறே
முண்டமான ஆடவரும்
கிழிந்து கிடக்கும் கன்னியரும்
சுமந்து நின்ற உயிரே
எந்தையே வாரும்
எம்முடன் வாழும்;

பாழாப்போன பாவிகள் நாம்
வாழவொரு ஈழம்
வாங்கித் தரும் தாகம்
ஊற்றாய் நின்ற அன்னை
கடலாய் நின்று தேங்கி
நிலத்தை நோக்கி ஏங்கி
நின் வருகைக்கும் நடைக்கும்
நயமான புன்-நகைக்கும்
தவமாய் கிடக்கும் தனயர்
வரமாய் வாரும் ஐயா;

உன் கால்பட்ட மண்ணும்
உன்னித் துடித்து
உயிர்பெற்று நிற்கும்,
தேகத்தில் எல்லாம்
என் தேச மண்ணை
அள்ளித் தெளித்து
ஆனந்தம் ஆடி
உன்கால்கள் விதைத்த
உன்னதங்கள் சூடி
உன் கனவு நட்டு
உதிரக் கால்வாய் வெட்டி
ஈழமாய் எழுவோம்
வானமாய் வாழ்த்தும்
தெய்வமேயான
தூயவா ஐயா.

17.05.2010

ஆறியிரு அம்மா!

தாய்திருப் பார்வதி அன்னை - எம்
தலைவனை ஈன்றிட்ட தவமிழைத்தொருவள்
ஊட்டினள் ஒருதுளித் தாய்ப்பால் - ஈழ
நாட்டினர் நெஞ்சங்கள் நேர்கொண்டு எழவே
எப்பெருந் தேசமுங் கண்டோம் - எம
தப்பன் வழிவந்த வீரங் கொண்டடித்தோம்
துரத்தித் துரத்தி யடித்தோம் - அவர்
தாண்டிய வேகத்தில் துரத்தேலா திருந்தோம்!

இனியென்(ன) ஈழம் என்றிருக்க - பார்ப்
பணியர் பயந்திட்ட துரோகம் கண்டழுதோம்
புரியும் துரோகம் அவர்தாம் - ஆழும்
புரியும் ஒருநாள் புரிந்திட்டு வருந்தும்
துளியாய் சேர்த்திட்ட மணிகள் - அதில்
பலியாய்ப் போனது பல்லாயிரக் கணக்கு
'புரியாய் துரோகம் இதற்கே - எம
துரிமைக்கே அன்றி உன் ஒருமைக்(கு)கேடில்லை '!

மொழியும் வளமும் விழுமியமும் - பிறழ்ன்
றழியும் மாற்றான் கை மடிப்பிச்சை கொண்டால்
முடியும் வரையினில் முயன்றோம் - பெரும்
இடியே விழுந்தும் இறுதியும் கண்டோம்
தீவிரவாதிக ளென்று உல கெங்கும் - இரந்து
கூவித்திரிய, சாற்றிய போர்ப்பறை ஒய்த்து
சாத்வீகமாக சமரசம் போனோம் - நாம்
சமாதானக்குழியில் சாகத்தான் போனோம்!

சித்திரவதை பல செய்தார் - உல
கத்தினர் கத்தல்கள் உதாசித் திளித்தார்
பெற்றிட்ட பேரடி எல்லாம் - அவர்
சற்றும் மறக்காமல் திருப்பியே தந்தார்
தனிமனித சத்தியம் மீறி - இது
இனத்தின் அரசியல் நகர்வென்று கூறி
'இரப்பினும் இவர்தரார் உரிமை' - எமை
'இறங்கிப்போ' வென்றோர் வெட்கிக்க இறந்தோம்!

இதுவுமோர் போர்வடி வம்தான் - விதைத்
ததுவும் வீணென்றே ஆகாமல் போக
வதைமுகா மேகிய தூயர் - தாம்
சிதைபட்டு வதைபட்டு நோற்குமோர் வேள்வி
நிலம் பிளந்தெழும்புமோர் புரவி - அதில்
வலம்வந்து எம்மண் உலவுவாய் அம்மா
குலங் குடி கோல் கொற்றம் - செழித்தே
தமிழீழம் விளங்கும் தாயுந்தன் தருவில்!
17.06.2010

Monday, 2 August 2010

கண்ணீர்க் குளக்கட்டு!

இன்றைய நாய்க் குரைப்பு யாருக்கானது என்ற 'திக்' கிழவனுக்கு, கேட்டிருந்தது அவருக்கு. செவிடான அவளுக்கு மனம் மட்டும் தான் பதைத்துக் கொண்டது, அவளுக்குக் கடைசியில் கேட்ட மைன்ஸ் சத்தம் மட்டும் இன்னும் 'உம்' மென்றபடி..
மனத்தின் மொழி அவளுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் பேசிக் கொள்கிறாள்.
அருகில் கிடக்கும் இவனுக்கு அரைத்துக் கொடுத்த கிணத்தடிக் கங்குல் கீரையும் பிரட்டிக் குடுத்த பிஞ்சு வெண்டிப் பால்கறியும் அவனது விதைப்பையில் வந்து சேர்ந்திருந்ததா என்று தடவிக் கொண்டு கிடந்தாள். இன்னும் நிறைய தோட்டத்துக் கீரைக்கு வவுனியாவிலிருந்து விதைக்குச் சொல்லிவிட்டிருந்தது ஒரு அழுத்தத்தைத் தந்தது.
தினமும் சிலமணிநேரம் திறந்துவிடப்படும் வன்னித் தெருச்சந்தையில் விற்கப்படும் சிங்களவூர்க் காய்கறியில் தோய்ந்திருக்கும் கிருமிநாசினியை கழுவிக்கழுவி கை கறுத்துப் போனாலும், `கிழவனுக்கும் எனக்கும் தான் சிங்களக் காய்கறி; பெடியனுக்கு மருந்தடிக்காத கத்தரிக்காயும் கிணத்தடிக் கீரையளுந்தான்` என்று சந்தையில் கருத்துப் பரப்புரையும் செய்வாள். காய்கறிகளோட சேர்த்துத் தின்னும் கிருமிநாசினி தன் மகனைக் குறிவைத்த சதி என்பதை நன்கு அறிந்திருந்தாள்.
யாழ்ப்பாணத்தில் அழிந்து போய்விட்ட தம்பளப்பூச்சி, மின்மினிப் பூச்சி இனங்களை அவர் அடிக்கடி சொல்லுவதை நினைத்துப் பார்ப்பாள். `கிருமி திண்ட மிச்சத்தை தின்னலாம், கிருமிநாசினியை தின்னக்கூடாது`.
வீரனாக மடிந்தவனின் வேதவாக்கை அவனின் விதையில் இருந்து உருவான வருங்கால் விருட்சத்துக்கு உரமாகப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள், எப்போதோ வீரமரணமடைந்து விட்ட மனதுடனும், அடுத்த சந்ததியை சரியாகத் தயார்ப்படுத்த வேண்டிய தவணையிலும்.
`இன்னும் கொஞ்ச நாள்ள அவன் வளர்ந்திடுவான்`. அவனுக்கு மரபுத் தமிழ்க்கவிதை எழுதச்சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருந்தாள்.

''
வன்னி விழாங்குளம் வந்தோம் - வீழ்ந்ததை
எண்ணிச் சிலகாலம் ஏங்கிக் கிடந்தோம்
ஏங்கி இனிப் பயனில்லை - என்றே
வீங்கிய கண்களில் வெறியை வளர்ப்போம்
தாங்கும் கரங்களைச் செய்வோம்- தமிழ்
ஓங்கிடத் தழைக்கவே மரபில் சிறப்போம்
''
இன்று அவனை எழுதவைத்து அவனையே பாராயணம் பண்ணவைத்த வரிகள்,

பாசத்துக்கு வேலிபோட்டு, போர் வெறிக்குள் அவனைத் திறந்துவிட்டிருந்தாள். கையில் அவன் கிடுக்கிப் பிடித்திருந்த கெற்றப்போல் கவண் இவளுக்கு சற்று நம்பிக்கையைத் தர சரிந்து படுத்தாள்.

`இவன் அந்தத் தெருநாய்களத் துரத்துவான், தெருக்களில் எங்களின் கீதங்களைப் புரழ விடுவான். புலியின் முகத்தைக் கொண்டும் பூனையின் பண்பைக் கொண்டும் என்குலப் பெண்களுக்கும் எனக்கும் தேசத்துக்கும் காவலனாய் இருப்பான்`.

அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் முதல் குரல் ஒரு பெண்குரல் தான், எப்போதும், எல்லா நாடுகளிலுமே.

`வெறி வெறி வெறி! விரட்டு! அவனை விரட்டு!`
மனங்குமுறக் கதறினாள் மனதுக்குள்

கிட்ட வந்துவிட்ட குரைப்பொலி கிழவனை கிலிப்படுத்த குடிசை கிசுகிசுத்தது
தூண்டியெழுந்தது அரிக்கன் லாம்பின் திரியோடு அவளது திடுதிடுப்பும் சேர்ந்து.

தன்மானத்தின் எச்சங்கள்
தீர்ந்து போகாமல்
ஆங்காங்கே
கிடந்து கொல்லுகின்றன.

அழிந்துகொள்ளும் மொழிகளில்
ஒன்றைப் பேசுவதில்
எவ்வளவு மனக்கனப்பு!
அவமானச் சிறுமை!

`எங்கோ சீமையில்
ஆடவர் குழாம் ஒன்று
என்மொழி வளர்த்துச்
செழித்துக் கிடக்குதாம்`

`அங்கே இருந்து
பெறுகேனா
ஒரு விந்து?`

ஒவ்வொரு இனப்பெண்ணும் இப்பிடித்தான்.

ஆண் அல்ல, பெண்ணே இனத்தைக் காப்பவள்.

`விடியாத இனங்களின் வரிசையின்
வால்ப்பகுதியில் இணைக்கப்படிருந்த
எனது தமிழ்ச் சாதியின் ஆண்களை விடவும்,
என் வீரர்கள் குருதியால் தோய்ந்த
என் நிலத்தைப் பார்த்துப் பேசவே நான்
நினைக்கிறேன்.`

''
ஆடைகள் கிழிக்கப்பட்டும்,
அவயவங்கள் முறிகப்பட்டும்,
பொத்திப் பொத்திப்
பத்தியமாய் அம்மா
போற்றி வைத்த என்
பெண்மை
தின்னப் பட்டாலும்,
நான்
திடமாகத்தான் இருக்கிறேன்!

வாழும் ஆசையுடன் அல்ல!
உங்களை
வீழ்த்தும் வெறியுடன்!

`கையில் ஒரு ஆயுதமும்
இல்லை என்பதால் நான்
மெளனிக்கிறேன்
ஆனால்
ஆயுதம் செய்யாமல்
இருந்துவிடுவேன்
என்று நினைக்காதீர்கள்`

ஆயுதத்தை,
உங்கள் அட்டூழியத்தின்
கடைசி அத்தியாயத்தைக்
கட்டி காத்து
மரபுத்தமிழ்
ஊட்டிச் செழித்து வளர்க்கிறேன், இதோ!

அப்போது
எங்கள் தெருவில்
தினந்தினம்
கெடுக்கப்பட்ட கதைகள்
பேசிக் கூடியழுது
கலையும் எம்போன்ற
பெண்கள்
இருக்கமாட்டோம்,
இறந்திருப்போம்!

ஒரு சிங்களப் பள்ளியும்,
`ஆமி பாதுகாக்கும்`
புத்தவிகாரையும்,
வெள்ளைப் பாவாடை
சட்டையுடன்
`வெசாக்` கொண்டாடும்
வேற்று இனப்
பெட்டைகளும் இருக்கலாம்;

ஆனாலும் என்
குலமரபு
தமிழ் மரபு
எம்
காதல் மரபு
கலவி மரபு
வீர மரபு
என்
காமத்தின் பேரெழுச்சியில்
பொழிந்த காதல்த் தீர்த்தத்தில்
கருவாகி உருவான
என் மகன் எழுவான்!

அப்போது அவனுக்கு
இதே சந்தர்ப்பங்கள்
கிடைக்கும்
ஆனாலும் அவனது
தந்தையின்
இன்றைய தோல்வி
ஒரு வரலாற்றுப் பாடமாகத்
துணையிருக்கும்.

அவன் வெல்வான்!

எனது பணி முடிந்தது
நான் தயார்!
''

அவனது கையில் கிடந்த கெற்றப்போல் கவணைப் பிடுங்கி பரணில் ஒளித்து வைத்துவிட்டு, இறுக்கி அணைத்து மார்போடு சேர்த்து நெற்றி முகர்ந்தாள். ஐந்து விரல்களையும் மடித்துப் பொத்திக் கைகளை இறுக்கிக் கொண்டு படுத்திருந்தாள். கால்த்தடங்கள் அண்மித்துவிட்டதை மனது சொல்லிக் கொண்டிருந்தது அவளுக்கு. படபடப்பு அவளை மிஞ்சிக்கொண்டு எழுந்தது மனத்தின் பெருவெறி.
முற்றத்தில் குரைத்த நாயின் சள்ளையில் ஓங்கி உதைந்த உதைப்பில் `அவுக்` என்று கத்தியபடி மரணப் பயத்தில் வேலிக்கரையில் ஓடிப்போய் நின்று நன்றியை கண்ணீரால் சொரிந்து கொண்டிருந்தது அது, குரைக்கவில்லை.